Saturday, 1 March 2014

யாதவர்கள் எல்லாருமே அழிந்துவிட்டனரா? இதுதான் விவாதப்பொருள்.


வேறொரு ஆங்கில மடற்குழுவில் நடைபெறும் விவாதம் ஒன்று
கருத்தைக் கவர்ந்தது.
யாதவர் என்ற அரச வமசத்தினர் மதுராவிலும் பின்னர்
துவாரகையிலும் ஆண்டனர். மகாபாரதப்போர் முடிந்து தர்மர்
அசுவமேத யாகம் செய்தபின்னர் சில காலம் கழித்து, ஒரு
ரிஷியின் சாபத்தால் யாதவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டனர்.
அத்துடன் துவாரகையும் கடலுள் மூழ்கியது.
அத்துடன் யாதவர்கள் எல்லாருமே அழிந்துவிட்டனரா?
இதுதான் விவாதப்பொருள்.

Dynastic Drift என்றொரு சமாச்சாரம் உண்டு. ஓர் அரச பரம்பரை
காலப்போக்கில் ஒவ்வொரு இடமாக பெயர்ந்து, தாம் ஆரம்பித்த
இடத்திலிருந்து வெகுதூரம் வந்துவிடும்.
வாணர்கள், பல்லவர்கள், சகர்கள், குஷானர்கள், ஹூணர்கள்,
மாங்கோலியர்கள் போன்றோர் அவ்வாறு பல மைல்கள் கடந்து
சென்றவர்கள்.
பல்லவர்கள் வெளிநாட்டினர் என்று பல அறிஞர்கள்
கருதுகின்றனர். இரானியர்களாக இருக்கலாம் என்ற கருத்தே
வலுவாக இருக்கிறது.
அவர்கள் கிருஸ்துவ சகாப்த்தத்தின் ஆரம்பத்தில் மத்திய
இந்தியாவிலிருந்த சாதவாஹனர்களின் கீழ் அரசு அதிகாரிகளாக
விளங்கினர்.
சில நூற்றாண்டுகளில் அவர்கள் ஆந்திராவின் தென் பகுதிகளில்
இருந்தனர். பின்னர் தொண்டை மண்டலத்தின் வட பகுதி. அதன்
பின்னர் தொண்டை மண்டலம் முழுவதும். பின்னர் வட தமிழகத்தில் -
சோழநாடு உட்பட அவர்கள் ஆட்சி நிலவியது.
பல்லவர்களின் சில கிளை மரபினர் தென் கிழக்காசியாவிலும்
தங்கள் அரசை நிறுவினர்.
இதுபோலவே வாணர்களும் வெளிநாட்டு ஆட்கள்தாம். அவர்களும்
ஆங்காங்கு பெயர்ந்து பெயர்ந்து தமிழகம்வந்துசேர்ந்தனர். ஒரு
காலகட்டத்தில் பாண்டியர்களை மதுரையிலிருந்து விரட்டிவிட்டு
அவர்களே மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

யாதவர்களின் கிளை மரபினரும் அதுபோலவே வேற்றிடங்களுக்குப்
பரவினர்.
இதுபற்றிப் புறநானூற்றுப் பாடலொன்றும்இருக்கின்றது.

'செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசை
உவராவீகைத் துவரையாண்ட
நாற்பத்தொன்பதின் வழிமுறை வந்த
வேளிருள் வேளே!'

இருக்குவேள் என்பவனைப் பற்றி கபிலர் பாடியது. அவர்
வாழ்ந்தது கி. பி. 2-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
துவாரகையிலிருந்து வந்த பதினெண்மர் கொண்ட வேளிர்
கூட்டத்தின் நாற்பத்தொன்பதாவது தலைமுறையைச் சேர்ந்தவன்,
அந்த இருக்குவேள்.
அவர்கள் யது குலத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களின் தொடர்பு கொண்டவர்கள் தாம் ஹொய்சாளர்,
சாளுக்கியர் முதலியவர்.
யௌதேயர் என்னும் அரச மரபும் இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment