என்னடா பேராண்டி இந்த ஊர்.
எல்லாமே தலைகீழா இருக்கு.
மாட்டுப் பொங்கல்னு சொல்றாய்ங்க மாட்டையே ஊரைவிட்டே ஓட்டிவிட்டு என்ன மாட்டுப் பொங்கல் கொண்டாடுவாய்ங்க.
அதே மாதிரி காணும் பொங்கல்னா சுற்றத்தையும் சொந்த பந்தங்களையும் பாக்கனும்.
அதவிட்டுட்டு கடற்கரைன்னும் கள்ளுக்கடைன்னும் அலையுதுங்களே என்று சலித்துக்கொண்டார் சிவகாமிப் பாட்டி
சிவகாமிப் பாட்டி பாண்டி நாட்டுப் பெண்மணி. பழனிக்கு அருகில் உள்ள ஆயக்குடி சொந்த ஊர். சங்க இலக்கியத்தில் ஆயக்குடி பற்றிய குறிப்பு இருப்பதாகப் பெருமையுடன் கூறுவார். அந்தப் பகுதியில் வாழும் குடிகள் பற்றிய தகவல் அனைத்தும் நன்கும் அறிந்தவர். எனவே அவரை மாட்டுப் பொங்கல் பற்றி ஏதாவது சொல்லட்டும் என்று வாயைக் கிளறினேன்
ஆயர்குலம் இருந்ததால் அந்த ஊர் ஆயக்குடி ஆனது. அவர்கள் எப்போது அங்கு குடியேறினார்கள் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு சரிந்திரச் சான்றுகள் இல்லை. அவர்கள் வளர்த்த மாடுகளுக்கும் சிந்துவெளி மாடுகளுக்கும் உருவ ஒற்றுமை இருப்பது மறுக்க முடியாது என்றார்..
மாடுகளைப் பிடித்துக்கொண்டு மதுரை மண்ணில் முதலில் குடியேறியவர்கள் கன்னடம் பேசுபவர்கள். எனவே சிந்து வெளியில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் அவர்கள் கிழக்கில் குடியேறி இருக்கவேண்டும் என்பது சிவகாமிப்பாட்டியின் அனுமானம்.
.ஆயக்குடி வாசிகள் மாடுகளைக் குடும்பச் சொத்தாக வைத்திருந்தாலும் அவற்றைக் கும்பலாக மேய்ச்சல் நிலத்தில் மேயவிட்டு அதற்குக் காவல் காக்க ஆட்களையும் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் வளர்த்த மாடுகளில் பட்டத்து மாடான தம்பிரான் மாடு என்பதற்கு ஒரு தனி வரலாறே இருக்கிறது.என்று சொன்ன சிவகாமிப்பாட்டி தம்பிரான் மாடு தெய்வத்தன்மை உடையதாகக் கருதி அவர்கள் வணங்கினார்கள் என்றும். பசு மாடுகளை அவர்கள் பால்கறக்க வணிக நோக்கத்தில் வளர்க்கவில்லை. இன விருத்திக்காக மட்டுமே பசுமாடுகள் வளர்த்தார்கள் என்றும் சொன்னார்
தம்பிரான் மாட்டுக்கென்று ஒரு மரபு வழிவழியாக இருந்துவந்தது. மற்ற மாடுகளிலும் தை ஒன்றாம் தேதி பிறக்கும் மாடுகளைக் கோவிலுக்கு நேர்ந்து விட்டுவிடுவார்கள் யாரும் அவற்றை வீட்டு மாடுகளாக வைத்து வேலை வாங்குவதில்லை. அந்தநாளில் பிறந்த மாடு இறைவனுக்கு உரியது என்று அவர்கள் கருதினர். பொதுவாக மாடுகள் இறந்தால் அவர்கள் அதைச் சக்கிலியனின் கத்திக்கு இரையாக்காமல் புதைக்கும் மரபு இருந்தது.
மாநிறைக்குத் தலைவனாக இருக்கும் மாட்டுக்கு பட்டத்து மாடு என்று பெயரிட்டு ஒரு மாடு இறந்தால் அதற்கு அடுத்த பட்டத்துக்கு இன்னொரு பட்டத்துமாட்டை மாடுகளே தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. இதற்கென மிகவும் செலவு பிடிக்கும் நடைமுறையைக் காலம் காலமாக ஆயக்குடி ஆயர்கள் கடைப்பிடித்து வந்தனர்.
புதிய பட்டத்துமாடு தேர்ந்தெடுக்க நாள் குறித்து எல்லா மாடுகளையும் பொது இடத்தில் கூட்டி சூடம் பத்தி வெற்றிலை பழம் வைத்துத் தேர்தலை நடத்துவார்கள்.. ஆராதனை முடிந்ததும் மாடுகளுக்கு முன்னால் ஒரு கரும்புக் கட்டை பட்டத்து மாட்டின் சேவகனான கப்பிலியான் வைப்பான். எந்தக் காளை மாடு முதலில் அடிஎடுத்து வந்து கரும்புக்கட்டைச் சாப்பிடுகிறதோ அதுவே பட்டத்துமாடாகத் தேர்ந்தெடுக்கப்படும். குங்குமம் வைத்து மாலையிட்டு முறையான சடங்குகளை நடத்தி அந்தமாடு பட்டத்து மாடாக ஏற்றுக்கொள்ளப்படும். அந்தக் காளை தெய்வாம்சம் பொருந்தியதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நந்தகோபாலஸ்வாமி என்ற புனிதப்பெயரிட்டு அழைக்கப்படும். இந்த மாட்டைக் கவனத்துடன் பார்த்துக்கொள்ள ஒரு கப்பிலியான் நியமிக்கப்பட்டு அவனுக்கென மானியமும் ஒதுக்கப்படும். நந்தகோபால ஸ்வாமிக்கு நகைகளும் தாமிரப் பட்டயங்களும் காலம்காலமாகக் காப்பிலியானால் பாதுகாக்கப்பட்டு வந்தது.
ஒரு கப்பிலியான் இறந்தால் இன்னொரு கப்பிலியான் நந்தகோபாலஸ்வாமி முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்படுவான். ஆநிறைகளை வெப்பகாலத்தில் மலைக்கு ஓட்டிச் செல்ல நந்தகோபாலஸ்வாமியின் முன் அனுமதி வேண்டும். நந்தகோபால ஸ்வாமி இறையருள் நிறைந்திருந்ததால் எல்லாப்புனித நிகழ்வுகளுக்கும் ஆசி வழங்குவது அவசியம்.
பொதுவாக மனிதனுக்கும் மாட்டுக்கும் உள்ள காலம்கடந்த உறவில் மற்ற பகுதியில் உள்ளவர்கள் மாட்டுடன் சேர்ந்து பயன் பெற்றதில் நல்லதை எடுத்துக்கொண்டு அவனுக்கு வேண்டாததையே மாட்டுக்குக் கொடுத்து ஏமாற்றுவது வழக்கம். நெல்லைக் கதிரடித்தபின் நெல்லை அவன் எடுத்துக்கொண்டு வைக்கோலை மாட்டுக்குக் கொடுப்பதும் நெல்லை அரைத்து அரிசியை அவன் எடுத்துக்கொண்டு தவிட்டை மாட்டுக்குக் கொடுப்பதும் சோறாக்கி பருக்கையை அவன் எடுத்துக்கொண்டு கஞ்சியை மாட்டுக்குக் கொடுப்பதும் மற்ற ஊர்களில் வழக்கம். ஆனால் இங்கே பசுக்களும் காளைளும் ராஜ வாழ்க்கை வாழும். காராம் பசுவின் பால கன்றுக்குப் போகக் கொஞ்சம் பாலர்களுக்குக் கொடுப்பார்கள். பசுவின் பாலை விலைக்கு விற்பது பாவம் என்று கருதப்பட்டது. காளைகளும் கண்ணும் கருத்துமாக பாசத்துடனும் பரிவுடனும் வளர்க்கப்பட்டன.
திருமணச் சீதனமாகக் கட்டாயம் ஒரு பசு இடம்பெறும். மந்திரம் ஓதும் மறையவர்களுக்குப் பசு தானமாக வழங்கப்பட்டது
அவ்வளவு சிறந்த ஆயர்குடியில் இருந்த பெண்கள் பலராமன் வழி வந்தவர்கள் என்று பெருமையுடன் கூறப்பட்ட ஆயர்குடிப் பெண்கள் பாண்டிய அரச குடும்பத்துடன் திருமண உறவு கொண்டவர்கள். அந்தத் திருமண உறவு காரணமாகவே பாண்டியர் பூமியான திருநெல்வேலியிலும் ஒரு ஆய்குடி உள்ளது. ஆய் மன்னர்கள் பான்டியர்களுக்கு உறுதுனையாக இருந்ததற்கு இந்தத் திருமண உறவே காரணம்.என்று குறிப்பிட்டார்
உன் ஊர் சாதாரணமான ஊர் அல்ல நீங்கள் எல்லாம் பலராமர் வழித் தோன்றல்கள். மாட்டுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு சங்க காலத்துக்கும் முற்பட்டது. எங்கள் காலத்தில் இருந்த மாடுகள் குடும்பத்தில் இரண்டறக் கலந்து வாழ்ந்தன. ஆட்டை அடித்து மாட்டை அடிக்கும் மனிதன் அப்போது அவன் கோர முகத்தைக் காட்டவில்லை. பசுக்கள் பால் வணிகத்துக்கும் களைகள் மாட்டிறைச்சிக்கும் பயன்படுத்தாத காலம். இப்போதெல்லாம் சீமைப் பசுமாடுகள் என்று மடியைத் தூக்க முடியாமல் அலையும் பத்தி லிட்டர் பாலைக் கொடுத்து வாழ்க்கையெல்லாம் அடிமையாக வாழ்ந்து வயதானால் மாட்டுத் தொட்டியில் மண்டை உடைந்து மனிதனுக்கு உணவாகிவிடுகிறது. எங்க காலத்தில் மாடில்லாமல் எந்தப் புனித நிகழ்வும் நடக்காது. பொங்கலைக் கொண்டாடும்போது மாடுகளின் தோழமையை மனதார நினைத்துப் போற்றவே மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது என்று கூறி முடித்தார் சிவகாமிப்பாட்டி
நாகராஜன் வடிவேல்
காளைமாடு தொடர்பான அனைத்து வேலைகளையும் ஆண்கள் செய்வார்கள்.
ReplyDeleteபசுமாடு தொடர்பான அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்வார்கள்.