Saturday, 1 March 2014

வேளிரும் வேளாளரும்



வேளிரே வேளாளர் என்று சொல் ஒப்புமையை ஒட்டி எழுந்த தவறான நம்பிக்கை தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கை பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு கேட்பதற்கு இனிதாக, எழுதுதற்குச் சுகமானதாக இருப்பதால் இதனை விசாரணைக்கு உள்ளாக்க அவர்கள் ஒருபோதும் தயாரில்லை. சங்க காலத் தமிழ் வேந்தர்கள், மருத நிலத் தலைமக்களாவர். ‘வேளாண்மையாகிய உழவுத் தொழில்’ செய்துவந்த, மருதநிலக் குடிகளான வேளாளரிலிருந்தே வேந்தர்கள் தோன்றினர் என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால் வேளிர்களை வேளாண்மையுடன் தொடர்புபடுத்த முடியாது என ஆர். பூங்குன்றன் பின்வருமாறு கூறுகிறார்:

“வேளாண்மைக்கும் வேளிர்க்குமிடையில் உள்ள தொடர்பு பல படிநிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது மிகவும் பிற்பட்ட வரலாறு. சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல் விளைச்சல் மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளர்களின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமுடையதாக இல்லை. வேளிர்கள் கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் வேளிர்க்கும் கால்நடை வளர்ப்பிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால் வேளிர் பற்றிப் பின்னாளில் கூறப்படும் மரபுத் தோற்றக் கதை அவர்களின் தொழிலைச் சுட்டுகின்றது. வேளிர்கள் அனைவரும் தங்களை யாதவர்கள் என்று கூறிக்கொள்வது கால்நடை வளர்ப்புக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினைச் சுட்டும்.” (தொல்குடி - வேளிர் - அரசியல், செங்கம் நடுகற்கள் - ஓர் ஆய்வு, பக். 93-94.)

துவாரகையை ஆண்ட கண்ணனின் வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன. எனவே பூங்குன்றன் அவர்கள் கருதுவதுபோல் வேளிரை யது குலத்துடன் தொடர்புபடுத்தலாமேயன்றி வேளாண்மை செய்யும் குடியுடன் தொடர்புபடுத்த முடியாது. உண்மையில், நம் ஆய்வாளர்கள் கருதுவதுபோல் ‘வேளாண்மை’ எனுஞ்சொல் உழவுத் தொழிலைக் குறிப்பதல்ல.

No comments:

Post a Comment